இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான கடல் பரப்பை நீந்தி கடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் பாதி வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல் பரப்பை நீந்தி கடக்கும் சாதனையில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக இந்த சாதனை பயணங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் உள்ளிட்ட சிலர் தொடர் நீச்சல் போட்டியில் பங்கேற்க ராமேஸ்வரம் வந்திருந்தனர். இதற்கான உரிய அனுமதியுடன் ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து படகு மூலம் தலைமன்னார் சென்றனர்.
இன்று அதிகாலை 12:10 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து நீச்சல் வீரர்கள் நீந்த துவங்கினர். இந்நிலையில் தொடர் நீச்சலில் மூன்றாவதாக நீந்திய கோபால்ராவ் (78) அதிகாலை 3:10 மணியளவில் தொடர்ந்து நீந்த முடியாமல் மயங்கிய நிலையில், படகில் ஏற்றப்பட்டுள்ளார்.
படகில் ஏற்றப்பட்ட அவரை உடன் சென்ற மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது, கோபால்ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து நீச்சல் வீரர்கள் அனைவரும் தொடர்ந்து நீந்துவதை கைவிட்டு, உயிரிழந்த கோபால்ராவின் உடலை தனுஷ்கோடி கொண்டு வந்தனர். பின்னர் கோபால்ராவின் உடல் அங்கிருந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இது குறித்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நீந்தி சாதனை படைக்க வந்த முதியவர் நீச்சல் பயணத்தின் போதே உயிரிழந்த சம்பவம், சக நீச்சல் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




