சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க முயன்ற இலங்கையை சேர்ந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), அவரது மனைவி ஹனீஷா (40) ஆகியோர் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தனர்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அவர்கள், இலங்கைத் தமிழர்கள்போல் பேசியதால் அவர்கள் மீது அதிகாரிகளூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட்டை பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸாார் விசாரணை நடத்தி வருகின்றனர்,