பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை – மஹரகம பிரதான வீதியின் ஆம்பில்லாவத்தை சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த ஒருவர் கடந்த 29ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திடீர் நெஞ்சுவலி காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய பன்னிபிட்டிய, ஆரவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்த நபர் ஏதோ ஒருவகையான பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளை உட்கொண்டு இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த மாத்திரைகளால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்படும் இந்த இடம் பல தடவைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், தொடர்ந்து செயல்பட்டது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.