இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டபார்ர்கள் திடிரென தூதரகத்தை நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த்து.
சிறிது நேர போராட்டத்தின் பின்னர் மீனவர்கள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
திடிரென மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றதனால் உடனடியாக அதிகமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் மீனவர்கள் தொடர்ந்தும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் இருந்து மீனவர்கள் வருகைதந்து ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.