முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் திகதி இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
விசுவமடு – இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார். அவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையை வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றி கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்பு சந்தேகிக்கப்படும் மதபோதகர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேற்று (19) சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட போது, குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டுள்ளதாக நீதிபதியிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தடய பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.