சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார்.
அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்து திறந்த வேன் மூலம் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஜிகே வாசன், சரத்குமார், குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது கூட்டத்தில் ராமதாஸுக்கு கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சால்வை அணிவித்தனர்.
முன்னதாக, முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கூட்டணி கட்சித் தலைவர்களை பேச அழைத்தார். அப்போது, அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவார் என்று கூறி அழைத்தார்.