போலி கடவுச்சீட்டுகளை வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக பிரமுகர்களான “ஹீனடியன மகேஷ்” என்ற நூரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் “மதுகம ஷான்” என அழைக்கப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோருக்கு இவர்கள் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் பின்னர், இருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற அவர்களிடமிருந்து மேலும் வாக்குமூலம் பெறப்படும் என்றும், மற்ற குற்றவாளிகளுக்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு பாஸ்போர்ட்களைத் தயாரித்துள்ளார்களா என்றும் விசாரணை நடத்தப்படும்.
இந்த கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக சந்தேகநபர்கள் இருவரும் பெருந்தொகை பணத்தை பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரான சந்தேகநபர், “ஹீனடியன மகேஷுக்கு” போலி கடவுச்சீட்டை வழங்கியதாகவும், திணைக்களத்தின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் “மத்துகம ஷானுக்கு” போலி கடவுச்சீட்டை தயாரித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“ஹீனடியன மகேஷ்” என்பவருக்கு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டில் போலி கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் போலி தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்துடன் “மணிக்குகே தினேஷ் சில்வா” என்ற பொய்யான பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திணைக்களத்தின் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் டொனகொட லியனகே குமார ஜயசிங்க என்ற போலியான பெயரில் “மதுகம ஷானுக்கு” போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் என சந்தேகிக்கப்படும் அவர் தற்போது ஓய்வூதிய திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த இரு அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.