வாழ்க்கை செலவு உயர்வுக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பொலிஸ் விஷேட அதிரடிப் படைத் தளபதி வருண ஜயசுந்தர, குருந்துவத்தை, கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி 30ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி விஹார மகாதேவி பூங்காவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு குருந்துவத்தை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான காரணமின்றி அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு எதிராக தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாகவும், கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை போலீசார் பயன்படுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகளால் கருத்து சுதந்திரம், ஒன்று கூடும் அடிப்படை உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.