கணவன் மாரடைப்பால் மரணமடைந்ததால் துக்கம் தாங்காமல் 7வது மாடியில் இருந்து குதித்து காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டெல்லி அருகே உள்ள காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (25). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இருவர் தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
கல்லூரி படிப்பின்போது அபிஷேக்கிற்கு அஞ்சலி (22) என்ற தோழியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியது.
இதையடுத்து, காதல் ஜோடி கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் காசியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7வது மாடியில் வசித்து வந்தனர்.
இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து ஓராண்டு (பெப்ரவரி 26) நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் கடந்த திங்கட்கிழமை அபிஷேக்கும் அஞ்சலியும் காசியாபாத்தில் உள்ள பூங்காவுக்கு சென்றுள்ளனர். பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அபிஷேக்கிற்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அபிஷேக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அபிஷேக்கின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காதல் மனைவி அஞ்சலி கதறி அழுதார்.
பின்னர், உயிரிழந்த அபிஷேக்கின் உடல் காசியாபாத் தம்பதி வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு இரவு 9 மணியளவில் கொண்டுவரப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த காதல் கணவன் அபிஷேக்கின் உடல் கண்டு அஞ்சலி கதறி அழுதார்.
கணவரின் உடலை நீண்ட பார்த்துக்கொண்டு இருந்த அஞ்சலி, யாரிடமும் பேசவில்லை. பின்னர் திடீரென்று 7வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனி பகுதிக்கு ஓடிச்சென்ற அஞ்சலி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அஞ்சலி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் கணவர் அனுமதிக்கப்பட்ட அதே சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அஞ்சலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சலி நேற்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார். திருமணமான 3 மாதத்தில் காதல் கணவன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் துக்கம் தாங்காமல் மனைவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




