யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடாத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை – 2024 க்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இத் தெழில்வாய்ப்பு சந்தையின் பிரதான நோக்கமாக அமைவது நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்பைப் (Internship Opportunities) பெற்றுக் கொடுப்பதாகும். இந்தத் தொழில் வாய்ப்புச் சந்தையில் கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழிநுட்பம் , தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார் 43 தொழில் வழங்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தவிர, தொழில் தேடும் இளைஞர், யுவதிகள், உயர் தொழில் நுட்பவியல் நிறுவன மாணவர்கள் உட்பட ஆர்வமுடைய சகலரும் பங்குபற்றிப் பயனடைய முடியும் என்றும், சமீபத்தில் தமது பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தொழிற்றுறை நிறுவனங்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்புகளை விருத்தி செய்தல் என்பன இத் தொழில் வாய்ப்புச் சந்தையின் துணை நோக்கங்களாகக் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.