மின்சார சபைக்கு சொந்தமான கம்பளை, டோலுவ, கொடவெல மாகாண களஞ்சியசாலையில் இருந்து மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கொடவெலயில் வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வீடு, லொறி, மின்கம்பங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளனர்.
மதிய உணவுக்காக வீட்டின் அறைக்கு சென்றதால் குடியிருப்பாளர்கள் விபத்தில் இருந்து அதிர்ஸ்டவசமாக தப்பித்தனர்.
இந்த மாகாண களஞ்சியசாலையானது கொடவெலவுக்கு அருகில் உயரமான இடத்தில் அமைந்துள்ளதுடன், மின் கம்பங்களை ஏற்றி வரும் லொறிகளின் பிரேக் அமைப்பு பாதிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியில் இவ்வாறான நான்கு விபத்துக்கள் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், முறையற்ற இடத்தில் களஞ்சியசாலை அமைக்கப்பட்டதன் மூலம் மின்கம்பங்களை ஏற்றிச் செல்லும் போது தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் மற்றும் உடமை இழப்புக்கள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதற்கு முன்பு நடந்த விபத்துக்களின் பின்னர் மின்கம்பங்களை ஏற்றிச் செல்வதை நிறுத்துவதாக கூறப்பட்ட போதும், தற்போது பெரிய லொறிகளில் இரகசியமாக ஏற்றிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கம்பளை பொலிஸார் வந்து லொறியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போதிலும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் எதிர்ப்பினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்பளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மின்சார சபையின் மாகாண பிரதான பொறியியலாளர் ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு நடத்தி சமரசம் ஏற்படுத்தினர்.





