யாழ்ப்பாணத்தில் நடிகை ரம்பா கணவனின் நிறுவனம் நடத்திய கேளிக்கை நிகழ்வு பொலிஸ் தடியடியில் முடிந்தது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து திரண்ட பல்லாயிரக்கானவர்கள் யாழ் நகரில் திரண்டதால் நகரமே ஸ்தம்பித்தது.
நிகழ்வில் எல்லை மீறிய ரசிகர்களை கட்டுப்படுத்த பொலிசார் நடத்திய தடியடி, கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேரளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி நிறுவனம் தொடங்கியுள்ள நடிகை ரம்பாவின் கணவர், இந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்து நேற்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாடகர் ஹரிகரன், நடிகை தமன்னா, நடிகர் சிவா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தனர்.
நிகழ்ச்சி மேடைக்கு முன்பாக, கட்டணம் செலுத்தியவர்களுக்காக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ரூ.25,000 செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், ரூ.7,000 செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், ரூ.3,000 செலுத்தியவர்களுக்கு பின் பகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, இதற்கு வெளிப்பகுதியில் இலவசமாக நிகழ்வை பார்ப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் சுமார் 20,000 இற்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாண நகரில் திரண்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலுமிருந்து நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தனர். யாழ்ப்பாண நகரையண்டிய பகுதிகளிலிருந்து- குறிப்பாக குருநகர் போன்ற பகுதிகளில் இருந்து- குடும்பம் குடும்பமாக- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தனர்.
நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களின் வாகனங்களால் யாழ் நகரம் முழுவதுமே நிறைந்திருந்தது. முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து கஸ்தூரியார் வீதி சந்தி, ஆஸ்பத்திரி வீதியில் கார்கில்ஸ் பூட் சிட்டி வரை, ஸ்ரான்லி வீதி என எல்லா இடங்களிலும் வாகனங்களை விட்டுவிட்டு, நிகழ்விடத்துக்கு இளைஞர்கள் ஓடிச்சென்றதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள்ளும் வாகனங்கள் விடப்பட்டிருந்தன. பின்னர் அவை அகற்றப்பட்டன.
நிகழ்வுக்கு வந்த பலரிடம் வினவியபோது, தமன்னாவை பார்க்க வந்ததாக தெரிவித்தனர். பல வயதானவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். குருநகரை சேர்ந்த 68 வயதான மூதாட்டியொருவரிடம் வினவியபோது, தமன்னாவை பார்க்க வந்ததாக குறிப்பிட்டார்.
நேற்று பெருமெடுப்பிலானவர்கள் திரண்டதால் நகரிலுள்ள உணவகங்கள், மதுபானச்சாலைகள் நிறைந்திருந்தன.
இரவு 10 மணிக்கு பின்னர் படிப்படியாக அமைதியின்மை அதிகரித்தது. இலவச பார்வையாளர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பை கடந்து இளைஞர்கள் உள்நுழைந்து, கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்குள் நுழைந்ததால் நிகழ்வில் குழப்பம் ஏற்பட்டது.
அவர்களை பின்னால் செல்லுமாறு அறிவித்த போதும், தடுப்பை கடந்து வெள்ளம் போல இளைஞர்கள் மேடையை நோக்கி பாய்ந்தனர். இளைஞர்களை பின்னால் செல்லுமாறு நடிகர் சிவா, தொகுப்பாளினி டிடி, ரம்பா, கணவர், பாடகர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டபோதும், கூட்டம் கட்டுப்படவில்லை. மேலும் மேலும் கட்டுக்கடங்காத நடத்தையை வெளிப்படுத்தியது. அமைதியாக இருக்குமாறு கோரிய போது, தமன்னாவை கூப்பிடுங்கடா என கூட்டத்திலிருந்து கத்தினார்கள்.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மேடையேறி, கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட போதும், தமன்னா வெறியர்கள் அடங்கவில்லை.
கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்ட போதும், முடியாமல் போக, விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டனர். அவர்களாலும் கட்டுப்படுத்த முடியாமல் போக, கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டியேற்பட்டது.
முன்னதாக கட்டுக்கடங்காமல் நடந்தவர்கள், கூட்ட நெரிசலில் பெண்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டவர்கள் என 20 பேர் வரையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இரவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். குற்றச்செயல்களில் ஈடுபட்ட 8 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த, பாதிக்கப்பட்ட 12 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.




