இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்கும் சமரச முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுப்பதற்காக நாளை (11) வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் கூடவுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக சி.சிறிதரன் தெரிவான பின்னர், கட்சியின் மரபை மீறி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் ஆர்வம் காட்டினார். பின்னர், சிறிதரன் அணியும், தனது அணியும் ஒற்றுமையாக செயற்படுவதெனில் தனது அணியை சேர்ந்த குகதாசனுக்கு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென விடாப்பிடியாக நின்றார்.
இதற்காக, கட்சி தலைவரின் அறிவிப்பையும் மீறி, மேலோட்டமான வாக்கெடுப்பொன்றை நடத்தியிருந்தார். இதில் சுமந்திரன் அணிக்கு சார்பாக சிலர் 2 கைகளையும் உயர்த்தினர். வாகன சாரதிகள், ஹொட்டல் ஊழியர்களும் கைகளை உயர்த்தினர்.
முன்னதாக, இந்த நிர்வாகிகள் தெரிவில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், பொ.கனகசபாபதி, குலநாயகம் ஆகியோர் கூடி நிர்வாகிகள் தெரிவை மேற்காண்டனர்.
செயலாளர் யார் என்ற விபரம் மாத்திரமே மத்தியகுழுவில் குறிப்பிடப்பட்டது. ஏனைய நிர்வாகிகளின் விபரம் மத்தியகுழுவில் குறிப்பிடப்படவில்லை. பின்னர், மத்தியகுழுவில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் தெரிவை அங்கீகரிக்கிறார்களா என சுமந்திரன் பொதுக்குழுவில் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பை நடத்தினார்.
சர்ச்சைக்குரிய விவகாரங்களை தொடர்ந்து தேசிய மாநாடும், நிர்வாகிகள் தெரிவும் பின்தள்ளி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் மாவை சேனாதிராசா வீட்டில், மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூடிப் பேசினர்.
இதை தொடர்ந்து மாவை சேனாதிராசா வெளிநாடு சென்று, இன்று நாடு திரும்பினார்.
இதற்குள் சி.சிறிதரன் தரப்பும் எம்.ஏ.சுமந்திரன் தரப்பும் பேசி, இணக்கப்பாட்டை ஏற்படுத்தி செயற்படுவதன தீர்மானித்துள்ளன.
இதன்படி- சர்ச்சைக்குரிய செயலாளர் தெரிவை மீள நடத்துவது, செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட குகதாசன்- சிறிநேசனுக்கு தலா ஒரு வருடம் வீதம் செயலாளர் பதவியை வழங்குவதென்ற இரண்டு யோசனை முன்வைக்கப்பட்டு, இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. இந்த இரண்டு யோசனைகளும் நாளை முன்வைக்கப்பட்டு, இறுதி தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடமாக பிரிப்பதெனில், யாருக்கு முதல் வருடத்தை வழங்குவதென்பதில் இழுபறியுள்ளது.
செயலாளர் பதவியை ஒரு வருடம் விட்டுக்கொடுக்குமாறு தனது ஆதரவு அணியை சிறிதரன் சமரசம் செய்துள்ளார். அண்மையில் மட்டக்களப்புக்கு சென்ற சிறிதரன், சிறிநேசனின் இல்லத்தில் நடத்திய சந்திப்பில், இந்த கோரிக்கையை வினயமாக முன்வைத்துள்ளார்.
சிறிதரனின் இந்த மாற்றம் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. கிழக்கில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் சிறிதரனை ஆதரித்தனர். சிறிதரனிற்கு கிழக்கு உறுப்பினர்கள் அதிகமாக வாக்களித்தமைக்கு அரியநேத்திரன், சிறிநேசன், யோகேஸ்வரன், கோடீஸ்வரன் முக்கிய பங்காற்றியிருந்தனர். எனினும், சிறிதரன் வெற்றியீட்டியதும் தனக்காக உழைத்தவர்களை கைகழுவி விடுகிறார் என்ற அபிப்பிராயம் கிழக்கிலுள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களையும், கட்சி பிரமுகர்களையும் அழைத்து சமரசம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சமரச கூட்டம் நாளை காலை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிதாக வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது சிறிநேசனும், குகதாசனும் ஒவ்வொரு வருடம் செயலாளர் பதவியை பகிர்வதா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்.
இதற்குள், செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துமாறு கோரி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.



