இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.
ஏ9 வீதியில், இரணைமடுவுக்கு அண்மையாக போர்க்களம் போல காட்சியளித்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இரணைமடு சந்தியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து, கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்த போது, பொலிசார், விசேட அதிரடிப்படையினர் வீதியின் குறுக்கே தடுப்பு அமைத்து, பேரணியை தடுத்தனர்.
இந்த பேரணியில் பங்கேற்க 5 பேருக்கு நீதிமன்றம் தடைபிறப்பித்திருந்த நிலையில், பொலிசார் பேரணியை நகர அனுமதிக்கவில்லை.
பேரணியின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், தடியடியும் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தரதரவென வீதியில் இழுத்து செல்லப்பட்டனர்.
மாணவர்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் முயன்றனர். பொலிசாரால் இழுத்து செல்லப்பட்ட மாணவன் ஒருவரை காப்பாற்ற சிறிதரன் எம்.பி, அவரின் மேல் கவசம் போல படுத்து காப்பாற்ற முயன்றார். பொலிசார் அவரை இழுத்து எடுக்க முயன்றனர்.
இந்த இழுபறியின் போது பொலிசார் தன்னை தாக்கியதாக சி.சிறிதரன் குற்றம்சாட்டினார்.
பொலிசாரால் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களின் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டது. கவிதரன், மிதுசன், எழில்ராஜ், அபிசேக், நிவாசன் கைது செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஏ9 வீதியின் ஒரு பகுதியை மறித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட இழுபறியின் பின் மாணவர்களின் விடுதலை தொடர்பான பேச்சுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இருவர், ஆசிரியர் சங்க பிரதிநிதி ஒருவர் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.