2031 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் விஜய்யின் அரசியல் வாழ்க்கை இரண்டு படி மேல் உயர போகிறது என தெரிவித்துள்ள ஜோதிடரத்னா சிம்மம் ஷியாம், விஜயின் அரசியல் பிரவேசம், ஜாதகரீதியாக விஜய்க்கு வெற்றி உண்டா… இல்லையா என்பது குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
“விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி மதியம் ஒரு மணிக்கு மேல் அறிவித்திருக்கிறார். விஜய்யின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியான நேரத்தை வைத்து நாம் பிரச்னம் கணித்தோம். அந்த நேரம் வானத்தில் இருந்த கிரகங்கள் அவருடைய கட்சியின் சாதக பாதகங்களைத் தெரிவிக்கின்றன. அவற்றை சற்று விரிவாக அலசுவோம்.
சூரியன் – மகரத்தில், சந்திரன் – துலாமில், புதன் – தனுசில், செவ்வாய் – தனுசில், சுக்கிரன் – தனுசில், சனி – கும்பத்தில், குரு – மேஷத்தில், ராகு – மீனத்தில், கேது – கன்னியில்.
இப்படியாக கிரகங்கள் வானத்தில் இருப்பதால் அவருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படப் போகின்றன… கட்சிக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கப் போகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.
விஜயின் எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியான நேரம் ரிஷப லக்னம், அப்படியானால் கலை, கலைத் துறையைச் சார்ந்த ஒரு நபரின் அடையாளமாக ரிஷப வீடும் துலாம் வீடும் இருக்கின்றன. அந்த வீட்டில் நடிகர் விஜய் லக்னமாகத் தேர்ந்தெடுத்ததால் இந்தக் கட்சியும் சினிமாவைப் போலவே அவருக்கு மிகுந்த ஏற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
குரு மேஷத்தில் அமர்ந்திருக்கிறார் அது செவ்வாயின் வீடு, அதேபோல செவ்வாய், குருவின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இப்படி இரண்டு முக்கியமான கிரகங்கள் ஒருவரை ஒருவர் வீடு மாறி அமர்ந்திருப்பது பரிவர்த்தனை யோகம் எனப்படும். இந்த யோகத்தின் மூலமாக நடிகர் விஜய் அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக மக்களுக்கு நலன் செய்து நன்மை பயக்கக் கூடிய காரியங்களைச் செய்வாரேயானால், நிச்சயமாக 100% அவருக்கு பதவியை கொண்டு வந்து சேர்க்கும்.
இரண்டு முக்கிய கிரகங்கள் ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று சூரியன். மற்ற கிரகங்கள் எப்படி சூரியனைச் சுற்றிக் கொண்டு வருகிறதோ, அதே போல தலைவனைச் சுற்றி தொண்டர்கள் எப்போதும் இருப்பார்கள். அந்த வகையில் சூரியன் எனப்படும் நபராக தமிழக வெற்றி கட்சிக்கு விஜய் திகழ்கிறார். அந்த சூரியன் பிரச்ன லக்னத்திற்கு ஒன்பதாம் பாவமான பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறது. செவ்வாயின் குருவுடன் பரிவர்த்தனை அடைந்து அவரவர் ஆட்சி வீட்டில் அமர்க்கிறார்கள். கால புருஷ லக்னத்திற்கு 9ஆம் பாவமான தனுசு ராசியில் குரு பரிவர்த்தனை பெற்று ஆட்சி பெற்று அமர்வது ஜாதகரை எப்படியேனும் கிங் மேக்கராக மாற்றிவிடும்.
காரணம் என்ன? ஒன்பது கிரகங்களில் குருதான் எல்லா கிரகங்களுக்கும் வழிகாட்டி அவர்தான் கிங் மேக்கர். அப்படி என்றால் 2026 விஜய் தான் கிங்மேக்கர் ஆக இருக்கப் போகிறார். யார் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது விஜயாகத்தான் இருக்கும். அதேபோல் 2031 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் விஜயின் அரசியல் வாழ்க்கை இரண்டு படி மேல் உயர போகிறது.
அதிகாரத்தைப் பொறுத்தவரை செவ்வாய் 2ஆம் இடத்தில் இருக்கிறது. விஜயின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாக இருந்து அதற்கு சந்திரன் முழு சக்தியைக் கொடுப்பதால் இளைஞர்கள் விஜயைத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அதே போலதான் அரசியலிலும் செவ்வாய் தான் விஜய்க்கு அதிகாரத்தைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது அப்படிப்பட்ட செவ்வாய் பரிவர்த்தனை பெற்று ஆட்சி பெறுவது விஜய்க்கு ஒரு சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடத் தயாரானால் நிச்சயமாக அவர் மிகப்பெரிய வாக்குகளைப் பெறப் போகிறார். அது மட்டும் இல்லாமல் யார் ஆட்சிக் கட்டிலில் அமர போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியை விஜய் பெறுவார். அதேபோல் 2031 ஆம் ஆண்டு விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் ஏற்றம் உண்டாகப் போகிறது. பிரச்ன லக்னத்திற்கு 10ஆம் பாவத்தில் சனி ஆட்சி பெற்று விளங்குகிறார்.
ஒரு ஜாதகத்தில் முழுமையான வெற்றி அடைய சனியின் பங்கு தான் பெரிய உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் கும்பத்தில் சனி இருக்க விஜயின் அரசியல் பிரவேசம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். எதிர்காலத்தில் விஜயின் அரசியல் விளையாட்டால் பல பெரிய மாற்றங்கள் நிகழப்போகின்றன. விஜய் தன்னுடைய கட்சியைக் கட்டுப்பாடுடன் ஒழுக்கமாக நடத்திச் சென்றால் அவர் வெற்றிப் பாதையில் பயணிப்பார் இல்லையென்றால் அவருக்கு அந்த இடத்தைத் தக்க வைப்பதில் சிரமம் ஏற்படும். விஜயின் ஜனன கால ஜாதகமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்பதைக் காட்டியபடியால் அவருக்கும் அந்த எண்ணம் உருவாகி, தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார் எதிர்காலத்தில் கோட்டையில் நுழைந்து, மத்தியிலும் தனது கால் தடத்தைப் பதிக்கப்போகிறார்“ என்றார்.