Pagetamil
முக்கியச் செய்திகள்

செயலாளர் பதவிக்கு களமிறங்கிய சுமந்திரன்…. கட்சியை விட்டு வெளியேறுவதென்றால் வெளியேறுங்கள்- சுமந்திரன் அணியை நேரில் எச்சரித்த சிறிதரன்: தமிழ் அரசு கட்சியின் இன்றைய குழப்பத்தின் முழுமையான விபரம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த தேசிய மாநாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இன்று காலையில் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, கூட்டத்தின் ஆரம்பத்தில், மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் எழுந்து, ஞா.சிறிநேசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார்.

இதையடுத்து, குகதாசன் எழுந்து- தான் 1965ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் இருப்பதாகவும், இம்முறை செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனே எழுந்த எம்.ஏ.சுமந்திரன், நேற்றிரவு சிறிதரன் தன்னுடன் தொலைபேசியில் தன்னுடன் பேசியதாகவும், தான் அந்த பதவியை ஏற்கவில்லையென்றும், செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

தலைமை பதவிக்கு போட்டியிட்ட சிறிதரன் தலைவராகி விட்டார், தோல்வியடைந்த நான் செயலாளராக வருவதே பொருத்தம், அப்படியானாலே இரண்டு அணிகளும் சமபலமாக இருக்கும் என்றார்.

இதையடுத்து, வடக்கை சேர்ந்தவரே தலைவர், அந்த பகுதியை சேர்ந்தவரே செயலாளராக நியமிக்கப்பட முடியாது என எதிர்ப்பு எழுந்தது.

இதன்போது, கொழும்பு கிளையை சேர்ந்த இரட்ணவேல் என்பவர், சாணக்கியனை செயலாளராக நியமிக்கலாமென பரிந்துரைத்தார்.

உடனே எழுந்த சுமந்திரன், அம்பாறை மாவட்ட தலைவர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியவர்களில் ஒருவர் செயலாளரானால், தான் போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார்.

இதை தொடர்ந்து, சிறிதரன்- சுமந்திரனுக்கு இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்போது, குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கலாமென இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

அத்துடன், ஏனைய பதவிகள் குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பொதுச் செயலாளர்- குகதாசன்
சிரேஷ்ட உப தலைவர்- சீ.வீ.கே.சிவஞானம்
இணை பொருளாளர்கள்- ஞா.சிறிநேசன், கனகசபாபதி
துணைத் தலைவர்கள்- கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேந்திரன், பா.சத்தியலிங்கம்
இணை செயலாளர்கள்- சாந்தி, சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த முடிவு மத்தியகுழு கூட்டத்தில் வெளியிட்ட போது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவை பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே குகதாசன் செயலாளராக அங்கீகரிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது.

சிறிதரன் தனது அணியை சேர்ந்த சிறிநேசனிடம் வந்து, ஒரு வருடத்துக்கு அவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாம் என சமசரம் செய்தார்.

இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதன்போது, இந்த பதவிகள் விபரம்முன்மொழியப்பட்டபோது, கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்களே இப்படி தீர்மானிப்பதெனில் எதற்கு பொதுச்சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என எகிறினர்.

இதன்போது, சுமந்திரன் கூட்டத்தை சமரசம் செய்ய முயன்றார். இப்படியான சந்தர்ப்பங்களில் போட்டிகளை தவிர்த்து, ஒருவருக்கு விட்டுக்கொடுத்து நடப்பது சிறந்தது, அதை பொதுக்குழு ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அப்போது கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர்- அப்படியானால் தலைவர் தெரிவில் நீங்கள் ஏன் போட்டியிட்டீர்கள்? சிறிதரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? என கேட்டார்.

அத்துடன், சிரேஸ்ட உப தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து, நீண்ட வாய்த்தர்க்கம், கருத்து மோதல் ஏற்பட்டது.

நீண்ட இழுபறியின் பின்னர், செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பை நாளை (28) நடத்தலாம் என தலைவர் மாவை அறிவித்தார். இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து பலர் எழுந்து செல்லத் தொடங்கினர்.

இந்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் திடீரென எழுந்து வந்து, தானே பதில் செயலாளர் என குறிப்பிட்டு, குகதாசனை செயலாளராக நியமிக்கலாமென்ற மத்தியகுழுவின் பரிந்துரையை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள், ஆதரிப்பவர்கள் கையை உயர்த்தலாம் என்றார்.

அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 112 பேர் கையை உயர்த்தினர்.

குகதாசனை செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள் என சுமந்திரன் கேட்டார். 104 பேர் கையை உயர்த்தினர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 341 பேர் என்றும், வாக்களிப்பு நாளை என்பதால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள் என்றும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர். குகதாசனை ஆதரித்து கையை உயர்த்தியவர்களில், அவர் அழைத்து வந்த பணியாளர்கள், வாகன சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் அல்லவென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

சுமந்திரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் விமர்சித்தனர்.

இந்த பின்னணியில், நாளை நடக்கவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாகவும், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவையும் ஒத்திவைப்பதாக தலைவர்கள் மாவை அறிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார்.

விரைவில் மத்தியகுழு கூட்டத்தை நடத்தி, மாநாட்டு திகதியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னரும், வெளியில் சூடான நிலைமை காணப்பட்டது. சுமந்திரன் அணியில் இணைந்துள்ள- முல்லைத்தீவு முஸ்லிம் சுயேட்சைக்குழுவில் தேர்தலில் போட்டியிட்ட பீற்றர் இளம்செழியன் போன்ற- அரசியல் அனுபவமற்ற இளையவர்கள் அங்கு வாய்ச்சவடால் விட்டபடியிருந்தனர். செயலாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார், அதை நிராகரிக்கும் கட்சியின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் நின்றார்.

அங்கு வந்த புதிய தலைவர் சி.சிறிதரன் இதை கேட்டு ஆத்திரமடைந்தார். “நீங்கள் யாரும் வழக்கு போடுவதெனில் போடலாம்… கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை“ என கோபமாக கூறினார்.

What’s your Reaction?
+1
2
+1
2
+1
1
+1
6
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!