இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17வது தலைவராக யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவாகியுள்ளார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) நடந்த பொதுக்குழு கூட்டத்தில், இரகசிய வாக்கெடுப்பில் சிறிதரன் வெற்றியீட்டி, புதிய தலைவராகியுள்ளார். 321 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் சிறிதரன் 184 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன 137 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் வெல்வார் அல்லது மிக நெருக்கமான போட்டி நிலவும் என சுமந்திரன் தரப்பினர் உறுதியாக நம்பியிருக்க… பெரும் வாக்கு வித்தியாசத்தில் சிறிதரன் வெற்றி பெற்றது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இம்முறை தலைவர் தெரிவையொட்டி, நீண்ட பல மாதங்களுக்கு முன்னரே எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்த தொடங்கியிருந்தாலும், இறுதியில் தமிழ் தேசியத்தின் பெயரில் சிறிதரன் வெற்றி பெற்று விட்டார்.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நடந்த, அதன் பின்னர் நடந்த ஹைலைட்டான சம்பவங்களின் தொகுப்பு இது.
பொதுக்குழு வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை குகதாசன் செய்திருந்தார். ஏற்பாடுகள் அனைத்தும் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டிருந்ததை கட்சியின் இரு அணியினரும் மனம் திறந்து பாராட்டினார்கள்.
பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியானவர்களின் பெயர்கள் என செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்தவர்கள், தமது அடையாள அட்டையை காண்பித்து உறுதி செய்த பின்னர் கூட்ட மண்டபத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில், தலைவர் மாவை சேனாதிராசா வேட்பாளர்கள் மூவரையும் அழைத்து, நீண்ட நேரம் தனிமையில் பேசினார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
வாக்குச்சீட்டில் சிறிதரனின் பெயர் முதலிலும், சுமந்திரனின் பெயர் இரண்டாவதாகவும், யோகேஸ்வரனின் பெயர் மூன்றாவதாகவும் காணப்பட்டன. இறுதிநாளில் போட்டியிலிருந்து விலகவேன் என யோகேஸ்வரன் அறிவித்ததாலோ என்னவோ, யோகேஸ்வரனுக்கு எந்த வாக்கும் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட ஒரு குழுவினரும், மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் உள்ளிட்ட குழுவினரும் மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் சர்ச்சை தோன்றியது.
இந்த விவகாரம் ஒரு சதி நடவடிக்கையா என்ற சந்தேகத்தை கட்சியின் பல மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அரசு கட்சியின் தொகுதிக்கிளை தெரிவில் மூத்த உறுப்பினர்களை புறக்கணித்து அந்தந்த பகுதி பிரமுகர்கள் தமது ஆதரவாளர்களை கொண்டு நிரப்பியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தலைமை பதவியை குறிவைத்து நீண்டகாலமாக செயற்பட்ட சுமந்திரன் அணியினர் மீதே இந்த குற்றச்சாட்டு அதிகமாக இருந்தது. உதாணரமாக, சாவகச்சேரி பிரதேச கூட்டங்கள் பற்றிய விபரம் சசிகலா ரவிராஜிற்கு அறிவிக்கப்படாமல், சயந்தனின் ஆதரவாளர்களே அங்கு நிர்வாகத்தில் தெரிவாகியிருந்தனர். வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த குற்றச்சாட்டு இருந்தது. பிரதேச, தொகுதி, மாவட்ட கிளைகள் சார்பில் வாக்களிக்க தெரிவு செய்யப்படாத- வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டிய மூத்த செயற்பாட்டாளர்களை வாக்களிக்க வைப்பதற்காக, தலைவரின் சிபாரிசில் தயாராகும் பட்டியலுக்கு அனுமதியளிக்கும் பாரம்பரியம் தமிழ் அரசு கட்சியில் உள்ளது. சுமார் 10 வரையான உறுப்பினர்களை அவ்வாறு அனுமதிக்கலாம்.
இதனடிப்படையில் சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி பட்டியல் ஒன்றை தயாரித்து, நிர்வாக செயலாளர் குலநாயகத்திடம், மாவை கையளித்தார். குலநாயகமும், அவரது மருமகன் பீற்றர் இளம்செழியனும் சுமந்திரன் அணியில் இணைந்து பல காலம். சுமந்திரன் தலைவரானால் செயலாளர் பதவி தனக்கு கிடைக்குமென நம்பி, அவர்களுக்காக குலநாயகம் செயற்பட்டதாக கட்சிக்குள் பரவலான அபிப்பிராயம் உள்ளது. மாவை கொடுத்த பட்டியல் சத்தியலிங்கம் தயாரித்த பட்டியலில் இல்லை. குலநாயகம் அந்த பட்டியலை செயலாளரிடம் சேர்ப்பித்தாரா அல்லது விளையாடி விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
பதில் செயலாளர் பா.சத்தியலிங்கமும் தலைவருடன் தொடர்பில் இருக்கவில்லை. செயலாளரால் எந்தவகையான பட்டியல் தயாராகிறது என்பது தெரியாத நிலையில், வேட்பாளர் சி.சிறிதரன் நேற்று இரவு, வவுனியாவிலுள்ள சத்தியலிங்கத்தின் வீட்டுக்கு நேரில் சென்றார். வீடு பூட்டப்பட்டிருந்தது. ஒரேயொரு மின்குமிழ் மாத்திரம் ஒளிர்ந்தபடியிருந்தது.
இன்று சசிகலா ரவிராஜ் தரப்பினர் வாக்களிக்க அனுமதிக்கப்படாததை தொடர்ந்து, தலைவர் மாவை தலையிட்டு, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென்றார். எம்.ஏ.சுமந்திரன் அதை மறுத்துள்ளார். தலைவர் இப்படியொரு பட்டியல் தயாரிக்க யாப்பில் இடமுள்ளதா என கேட்டார். கிளை தெரிவுகளில் குழறுபடி நடந்ததை சுட்டிக்காட்டி, அப்படியொரு மரபிருப்பதை மாவை சுட்டிக்காட்டினார்.
மாவையின் தொகுதியில் (சுமந்திரன் ஆதரவாளரான) வலிவடக்கு சுகிர்தனை தவிர்த்து நிர்வாகம் தெரிவு செய்யவில்லையா என சுமந்திரன் கேட்டார். யாப்பின்படி செயற்படுவதென்றால் வட்டாரக்கிளை ரீதியாக அனைத்து உறுப்பினர்களையும் ஆராயலாம் என மாவை சொல்ல, பொருளாளர் கனகசபாபதி பட்டியல் விபரங்களை எடுக்க, சுமந்திரன் பின்வாங்கி விட்டார். சுமந்திரன் தரப்பு கிளை தெரிவுகளில் நடந்த விதிமீறல் விபரங்கள் அப்டேட் மாவை தரப்பின் விரல் நுனியில் இருந்தது. அந்த அஸ்திரத்தை மாவை எடுத்த போது சுமந்திரன் பின்வாங்கி விட்டார்.
இதையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட ஒரு பகுதியினர் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் இருந்து சென்றவர்கள் வாக்களிப்பதை சுமந்திரன் கடுமையாக எதிர்த்தார். மட்டக்களப்பு அணியில் 3 பெண்களும் இருந்தனர். மாவை தரப்பு கடும் அழுத்தம் பிரயோகிக்க, மட்டக்களப்பு மாவட்ட தலைவரிடம் கேட்டு முடிவெடுங்கள் என சுமந்திரன் நழுவிவிட்டார். சாணக்கியன் மாட்ட தலைவர். அந்த பட்டியல் தனக்கு தெரியாமல் நியமிக்கப்பட்டது, அவர்கள் வாக்களிக்க முடியாது என சாணக்கியன் ஒற்றைக்காலில் நின்றார். அதனால் முன்னாள் அரச அதிபர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் வாக்களிக்க முடியவில்லை.
மொத்தமாக 321 பேர் வாக்களித்தனர். இதில் சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும், சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்பின் பின்னர் பேசிய சுமந்திரன் தரப்பு பிரமுகர் ஒருவர்- “கடந்த இரவில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. திருகோணமலை, வவுனியா வடக்கு, முல்லைத்தீவின் துணுக்காய் பகுதிகளில் திடீர் மாற்றம் நிகழ்ந்து, எமக்கு வாக்களிக்கவிருந்தவர்கள், சிறிதரனுக்கு வாக்களித்துள்ளனர். அம்பாறையும் எமக்கு ஆதரவாக இல்லை. இந்த மாற்றம் எப்படி நிழ்ந்தது என தெரியவில்லை. யாழ் மாவட்டத்தில் கணிசமான உறுப்பினர்கள் சுமந்திரனைத்தான் ஆதரித்தனர். ஆனால், கிழக்கு மாகாணத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் சிறிதரனை ஆதரித்துள்ளனர்.“ என்றார்.
இது தொடர்பில் சி.சிறிதரன் தரப்பு பிரமுகர் ஒருவரை தமிழ்பக்கம் வினவியபோது, கடந்த இரவு முழுவதும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசி, தமக்கு ஆதரவாக மாற்றியதாக தெரிவித்தார்.
“பாராளுமன்ற தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளில் பேசுவதை விடவும் அதிகமாக, கட்சி தலைவர் வாக்கெடுப்பு பிரச்சாரத்தில் பேசியுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் அனேகமானவர்கள் ஏதோவொரு விதத்தில் விடுதலை போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள். அதனால் அவர்களுடன் இலகுவாக கனெக்ட் ஆக முடிந்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பொதுக்குழு உறுப்பினர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிறிதரனையே ஆதரித்தனர். சிறிதரனின் வெற்றிக்க கிழக்கு மாகாணமே முக்கிய காரணம்“ என்றார்.
வாக்கெடுப்பில் சிறிதரன் வெற்றியடைந்ததும், இரா.சம்பந்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறிதரனை வாழ்த்தினார். அத்துடன், திருகோணமலை காளி கோயிலில் வழிபட்டு விட்டு செல்லுமாறும் கூறினார். சிறிதரன் மண்டபத்திலிருந்து நேராக திருகோணமலை காளி கோயிலுக்கு சென்றார். அங்கு பூசகர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், சிறிதரன் வருவார் என தொலைபேசியில் சம்பந்தன் தகவல் தந்ததாகவும் குறிப்பிட்டார்.
பொதுக்குழுவில் சிறிதரன் தரப்பு பலமாக இருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிதரன் தரப்பினால் சிரமமின்றி பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவார். அனேகமாக மட்டக்களப்பில் சிறிநேசன்தான் பொதுச்செயலாளராக வாய்ப்புள்ளது. மட்டக்களப்பில் சிறிநேசனை பொதுச்செயலாளராக்கி, சாணக்கியனுக்கு நெருக்கடி கொடுக்கும் உத்தியை சிறிதரன் மேற்கொள்ளக்கூடும். தலைமை பதவி பிரச்சாரத்தில் சாணக்கியனின் பிரச்சாரங்கள், சிறிதரனை கடுமையாக கோபப்படுத்தியிருந்தது. இன்னும் சொல்லப் போனால், சுமந்திரனை விட சாணக்கியனிலேயே சிறிதரனுக்கு அதிக கோபம். மாறாக, சுமந்திரன் வென்றிருந்தால் அந்த கோபம் யோகேஸ்வரன் மீது பாய்ந்திருக்கும்!
தமிழ் அரசு கட்சியில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய முக்கிய தலைவர்கள் பேராசிரியர் சிற்றம்பலம், அருந்தவபாலன் போன்றவர்களை வீடு தேடிச் சென்று, மீண்டும் கட்சிக்குள் அழைக்க சிறிதரன் திட்டமிட்டுள்ளார்.




