கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பெண் 39 வயதான சுசனா சேத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் சிஇஓ. இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள் கிழமை மீண்டும் பெங்களூரு திரும்பும்போது தனது மகனை கொலை செய்து பெரிய பேக் ஒன்றில் கொண்டுசென்றபோது சிக்கிக்கொண்டார். கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவரை ஆறு நாள் போலீஸ் காவலில் வைக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெற்ற மகனை கொலை செய்த பின்னணி குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரிவால் இந்தக் கொலையை சுசனா செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சுசனா சேத், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 2010ல் இவர்கள் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விவாகரத்து நடவடிக்கைகள் 2022ல் தொடங்கிய நிலையில் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இருவர் பிரிவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. கூடவே, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தந்தையுடன் மகன் நேரத்தை செலவிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுசனா சேத் அதிருப்தி அடைந்ததாக அவரிடம் விசாரணை நடத்திவரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு இதுதான் காரணமா என்கிற கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
கொலை பின்னணி
சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர்கள் சுசனா சேத்தை விமானத்தில் பெங்களூரு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காரணம் அங்கிருந்து சுமார் 600 கி.மீ தூரம் தொலைவில் உள்ள பெங்களூரு செல்ல சாலை வழியாக 12 மணி நேரம் ஆகும். அதுவே, விமானத்தில் 90 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்பதால் விமான பயணத்தை ஹோட்டல் ஊழியர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுசனா சேத் ஊழியர்களின் அறிவுறுத்தலை நிராகரித்து டாக்ஸியில் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
டாக்ஸி வந்ததும் தனது அறையில் இருந்து பெரிய பையுடன் தனியாக வந்துள்ளார் சுசனா. ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக செல்வதை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள், அவர் சென்றதும் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போதும் ரூமில் சிவப்பு நிறக் கறைகளைக் கண்ட ஊழியர்கள், அந்தக் கறை ரத்தம் என்பதை உறுதி செய்தவுடன் சந்தேகம் அடைந்து உடனடியாக கோவா போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் ஹோட்டலை அடைந்து, டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவை தொடர்பு கொண்டுள்ளனர். சாதாரணமாக பேச்சு கொடுப்பது போல், சுசனாவிடம் அவரின் மகன் குறித்த தகவலை திரட்டியுள்ளனர். ஹோட்டலுக்கு அவருடன் வந்த மகனை காணவில்லை என்பதையும் போலீஸார் டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவிடம் கேட்கவைத்துள்ளனர். அதற்கு, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மகனை விட்டுவிட்டதாக கூறிய சுசனா, தவறான முகவரி ஒன்றையும் அளித்துள்ளார். உடனடி விசாரணையில் இறங்கிய கோவா போலீஸார் சுசனா கொடுத்தது போலி முகவரி என்பதை உறுதிசெய்துகொண்ட பின், டாக்ஸி டிரைவரை மீண்டும் தொடர்புகொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வண்டியை திரும்பும்படி உத்தரவிட்டுள்ளனர்.
போலீஸார் சொன்னது போல், கர்நாடகாவின் சித்ரதுர்கா நகர் காவல் நிலையத்துக்கு வண்டியை திருப்பிய டாக்ஸி டிரைவர் அங்கிருந்த போலீஸாரிடம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார். அதன்படி, சுசனாவை விசாரித்த போலீஸார், அவர் வைத்திருந்த பெரிய பையை சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. சுசனாவின் நான்கு வயது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெரிய பையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் சுசனாவை உடனடியாக கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கோவாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் மகனை கொன்றதை ஒப்புக்கொண்ட சுசனா, அதற்கான காரணமாக கணவரை பிரிய இருப்பதை கூறியுள்ளார்.