சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவில் கடமையாற்றும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேரத் குமார, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து ஹேரத் குமாரவைக் கைது செய்ததுடன், பின்னர் மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் தரக்குறைவான கையிருப்புகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி குமார ஆவார்.
இரண்டு மூத்த அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களைத் தயாரித்து, ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த அருண தீப்தி என அழைக்கப்படும் சுதத் ஜானக பெர்னாண்டோ தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க ஆகியோர் போலியான அமைச்சு ஆவணங்களை வழங்கி தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு உதவியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அதே சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவும் கைது செய்யப்பட்டார்.
2023 டிசம்பரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்க முன்வந்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
கைதான தரப்பினர், இந்த விவகாரத்தில் பெரிய சுறா மீன்களை வெளியில் உலாவவிட்டு, சிறிய நெத்தலிகளையே பொலிசார் கைது செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.