பொதுமகன் ஒருவரிடம் தனது உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளை செலுத்த கொடுத்து விட்டு, பின்னால் அமர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி மது போதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரி ஒரு சப்-இன்ஸ்பெக்டர். அவர் வான்-எல பொலிஸ் நிலையத்தில் இருந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் வான்-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது மது போதையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பொருந்தாத வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரி மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொள்வதால் இது தொடர்பில் முடிவெடுக்குமாறு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் இந்த உத்தியோகத்தர் பயணித்ததாகவும், சிவிலியன் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகவும், அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கைதுசெய்துள்ளனர். காவல்நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.