கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் பரீட்சை அடுத்த 22 நாட்கள் நடைபெறும்.
281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,531 தனியார் விண்ணப்பதாரர்களுமாக 346,976 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை அட்டவணையில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே விண்ணப்பதாரர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் அனர்த்த சூழ்நிலையில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளன.
தற்போதைய அவசர நிலை காரணமாக பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்விப் பிரிவுகளில் வசிக்கும் பரீட்சார்த்திகளுக்கான விசேட பரீட்சை நிலையமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து பாடங்களுக்கும் இந்த விசேட பரீட்சை நிலையம் மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இது தவிர, அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் தடை ஏற்பட்டுள்ள பரீட்சார்த்திகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ அழைத்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.