யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் ஆதரவாளர் என நம்பப்படும் ஒருவர் காடைத்தனமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடந்த போது, இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
இன்றைய கூட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீவிர ஆதரவாளரான ஒருவர்- மீனவர் சங்கத்தின் பிரதிநிதியென்ற போர்வையில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அளவு கணக்கில்லாமல் புளுகிக் கொண்டிருந்தார்.
அமைச்சரை புகழ்வதற்கெனவே அவர் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் போலுள்ளது என கூட்டத்தில் இருந்தவர்கள் தமக்குள் கிண்டலாக பேசிக் கொண்டனர்.
கூட்டத்தின் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.கஜேந்திரன், சி.சிறிதரனுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்த சமயத்தில், கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த டக்ளஸின் ஆதரவாளர் எழுந்து கூச்சலிட்டு பேசத்தொடங்கினார். அவர் கூச்சலிட்டு பேசி- காடைத்தனமாக செயற்பட்டபடி- மண்டபத்தின் மையப்பகுதியை நோக்கி முன்னேறினார்.
அந்த ஆசாமியின் நடத்தை தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
இந்த விதமான கூட்டங்களில், இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த செயற்படும் ஆசாமிகளை மண்டபத்தை விட்டு வெளியேற்றுவதே வழக்கம். எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதை செய்யவில்லை. அவர் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதியென சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.
காடையர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துகிறீர்களா என செ.கஜேந்திரன் எம்.பி, சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.
பின்னர், காடைத்தனமாக நடந்து கொண்ட ஆசாமியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுப்படுத்தினர்.