தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக அலுவலகத்தில் உடல் அடக்கம்: மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதனிடையே, அங்கே அவரது உடல் நாளை (வெள்ளி) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.
பொது இடத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை: எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எல்கே சுதீஷ் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பொது இடத்தில் அடக்கம் செய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதேநேரம், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்தன் பேரில் அங்கே உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முன்னதாக, விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.