இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலக இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி கொடுக்கும் என்பதை நம்புவோம் என யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் சாவின் நிழல் சூழ்ந்துள்ளோர் மேல் சுடரொளி உதித்தது.”
ஒளி அல்லது பேரொளி என்பது இருளற்ற நிலையாகும். ஓளியற்ற நிலை என்பது பார்வை இழந்த நிலையாகும். பார்வையிழந்த நிலையில் ஒரு மனிதனோ மனித குலமோ பயணம் செய்ய முடியாது. எனவே தான் இறைவன், பாவ இருள் சூழ்ந்த உலகில் வாழும் மனிதருக்கு தன் மகனை ஒளியாக அனுப்பி வைக்கின்றார். பாலக இயேசுவே இந்த ஒளி. அவரின் பிறப்பே எமக்கான விடியல். அமைதியான விடியலை நோக்கி நாம் பயணம் செய்ய பாலக இயேசு என்னும் மாபெரும் ஒளி எம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டள்ளது.
2025, யூபிலி ஆண்டை நோக்கி பயணம் செய்யும் திரு அவையை, பிறக்கவிருக்கும் 2024ஆம்
ஆண்டை, இறைவேண்டல் ஆண்டாக பின்பற்ற திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனைப் புகழ்ந்து கொண்டு, இறைவேண்டலில் எம்மை இணைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாய் நாம் நடக்க மாபெரும் ஒளியாகிய பாலக இயேசுவின் அமைதியும் ஆசீரும் மனுக்குலத்திற்கு என்றும் கிடைப்பதாக.
ரஸ்யா, உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் என போர் நடைபெறும் நாடுகளும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, சீனா, வட கொரியா, தென் கொரியா என போர் முறுகல் நிலையிலுள்ள நாடுகளும் காரிருள் இன்னும் இந்ந உலகை கவ்விக் கொண்டே இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றன.
அன்று இராமாவிலே கேட்ட அழுகுரல்களை விட பல மடங்கு அதிகமான அழுகுரல் இன்று இயேசு பிறந்த தேசத்திலும் எங்கும் கேட்கின்றது. இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலக இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி கொடுக்கும் என நாம் நம்புவோம்.
இந்ந இறைவேண்டல் ஆண்டில் மனந்தளராது நம்பிக்கையோடு செபிப்போம். எனவே இந்ந மகிழ்ச்சியின் நாட்களிலே பாலக இயேசுவின் அமைதியும், ஆசீரும் முழு உலகையும் நிரப்ப ஆசித்து நிற்கின்றேன். பாலகனின் ஆசீர் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் உங்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும் விடியலும் கொடுக்க ஆசித்து வாழ்த்தி நிற்கின்றேன் என்றார்.