டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று (23) உயிரிழந்துள்ளார்.
மாவிட்டபுரத்தை சேர்ந்த குணரத்தினம் சுபீனா (25) என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவியே உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இந்த மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு டெங்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து வாந்தியெடுத்ததால், அதை கட்டுப்படுத்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. அந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டதும், அவரது உடல்நிலையில் அசாதாரண மாற்றம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அதிதீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவருக்கு செலுத்தப்பட்ட ஊசியினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இந்த வகை மருந்தினால் இலங்கையில் ஒவ்வாமை பதிவாகிய முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
இந்திய கடனுதவியின் கீழ், தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பரவலான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மாணவிக்கு ஏற்றப்பட்டது தரமற்ற மருந்தா அல்லது மாணவியின் உடல்நிலை ஒவ்வாமையா காரணம் என்பது மேலதிக பரிசோதனையின் பின்னரே உறுதி செய்யப்படும்.
மாணவியின் இதயம் செயலிழந்து நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், உடல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.