27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

ஓம்… ஜூம்சா: காத்திருக்கும் அரிசி தட்டுப்பாடு… வெண்முதுகு தத்தியை கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டதா வடக்கு விவசாய திணைக்களம்?

வடமாகாணத்தில் பரவிய வெண்முதுகு தத்தி பூச்சி பரவலால் கணிசமான நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இந்த சம்பவம், வடமாகாண விவசாய திணைக்களத்தின் பலவீனத்தையும், செயற்றிறன் இன்மையையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமாக வடமாகாண விவசாய திணைக்களம் அரசியல் தலையீட்டு நியமனங்களால் மிகப்பலவீனமான அமைப்பாக மாறியிருப்பதை தமிழ்பக்கம் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தது. தமிழ் பக்கம் முன்னர் ஒருமுறை இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய போது, வடமாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களை அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு, தமிழ்பக்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என கூறியிருந்தார்கள்.

வடக்கில் தற்போது தீவிரமாக பரவிவரும் வெண்முதுகு தத்தி பரவலால் யாழ் மாவட்டத்தில் மட்டும் 5,000 ஹெக்டேயர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளது. கிளிநொச்சியில் 800 ஹெக்டேயர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

விவசாயிகளை அறிவூட்ட, விவசாய திணைக்களத்தின் கீழ் பிரதி மாகாணா பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்களை கொண்ட கட்டமைப்பு உள்ளது. தற்போதைய நிகழ்வு, இந்த கட்டமைப்பின் செயல்திறன் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது.

வடமாகாண முன்னாள் விவசாய பணிப்பாளர் சிவகுமார், தனக்கு முன்னிருந்த சிரேஸ்ட உத்தியோகத்தர்களை தவிர்த்து, விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது ஆளுந்தரப்பிலுள்ள வடக்கு அரசியல் கட்சியொன்றின் தலையீட்டினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக அப்பொழுது செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் பின்னர், வடமாகாண விவசாய அமைச்சின் திறமையான- சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பலர் மாகாண விவசாய திணைக்களத்தில் இருந்து, வெளியேறியிருந்தனர். பலர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த பின்னணியில், தற்போது வெண்முதுகு தத்தி பூச்சிகள் வடக்கில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில், தென்மராட்சி பகுதியில் இதன் தாக்கம் அதிகளவில் காணப்பட்டுள்ளது. வெண்முதுகு தட்டியை பற்றி விவசாயிகள் போதுமான விளக்கத்தை கொண்டிருக்காததால், நிலைமை மோசமான கட்டத்துக்கு சென்றுள்ளது.

வயலில் பூச்சிகளை அவதானித்த விவசாயிகள், பனிப்பூச்சி உள்ளது என நினைத்து, பல வகையான இரசாய கிருமி நாசினிகளை விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் வயலில் உள்ள ஆமைவண்டு, தும்பி, குளவி, சிலந்தி, எறும்புகள் அழிவடைந்துள்ளன. இவை, வெண்முதுகு தத்தியை உணவாக உட்கொண்டு, அவற்றின் பரவலை கட்டுப்படுத்துபவை.

விவசாய திணைக்களத்தின் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கிரகமான கள விஜயம் மேற்கொண்டிருந்தால், வெண்முதுகு தத்தியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தியிருக்கலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெண்முதுகு தத்தி கட்டுப்படுத்த முடியாத பூச்சியினம் அல்ல. அதை ஆரம்பத்திலேயே சரியாக அடையாளம் கண்டிருந்தால், வெண்முதுகு தத்தியை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஒரு செடியில் 8- 12 பூச்சிகள் வந்த பின்னரே கிருமிநாசினி பயன்பாட்டுக்கு அதிகாரிகள் முடிவுக்கு வருவார்கள். ஆனால், அதற்கு முன்னதாக, வருமுன் காப்பது, பூச்சி பரவினால் அதை பரவாமல் கட்டுப்படுத்தும் செயல்முறை சரியாக நடந்திருந்ததா என்ற கேள்வியுள்ளது.

இம்முறை எல்நினோ தாக்கத்தினால் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என விவசாய திணைக்கள அதிகாரிகள் அறிவூட்டப்பட்டிருந்தனர். பூச்சி பரவலை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டிருந்தால், வயல் தண்ணீர் ஏனைய வயல்களுக்கு செல்வதை கட்டுப்படுத்தி, முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், பூச்சி பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

எனினும், அது நடக்கவில்லை.

பூச்சி பரவல் அதிகரித்த பின்னரே, கிருமி நாசினியை பயன்படுத்த அறிவுறுத்தப்படும். கிருமிநாசினியின் அதிக பாதிப்பு காரணமாக, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, அதனை கடைசி தெரிவாக வைத்துள்ளனர். தற்போது, வெண்முதுகு தத்தி பெருகியதன் பின்னர், அந்த வயல் நிலங்களில் கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிகளை அறிவூட்டுவதற்காக போகத்துக்கு முந்தைய பயிற்சி வகுப்புக்கள் முன்னர் நடத்தப்பட்டிருந்தது. தற்போது அது பெருமளவில் நடப்பதில்லை. நடந்தாலும், வினைத்திறனாக நடக்கவில்லையென்பது தற்போதைய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

வடமாகாண விவசாய திணைக்களத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டுவது- ஒட்டுமொத்த நாட்டினதும், விவசாயிகளின் நலனிற்காகவே.

தற்போது வயல்கள் அழிவடைந்ததால், எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவுத் தேவைக்காக அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாலும், சிறுபோகத்துக்கான விதை நெல் தட்டுப்பாட்டை எப்படி சமாளிப்பதென்ற கேள்வியெழுந்துள்ளது.

இப்படியான கேள்விகளின் மத்தியில் மற்றொரு தகவலையும் குறிப்பிட வேண்டும்.

வடமாகாண விவசாய பயிற்சி மையமொன்றில் சில காலத்தின் முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. விவசாய போதனாசிரியர்கள் பூச்சி கட்டுப்பாட்டு பயிற்சிக்கு அழைக்கப்பட்ட பின்னர், ஆன்மீக முறையில் பூச்சிக்கட்டுப்பாட்டு முறை பற்றி பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனிதர்களை ஒரு நிலைப்படுத்துவது போல, ஆன்மீக முறையில் பூச்சிக்கட்டுப்பாடு மேற்கொண்டு, தாவரங்களை ஒரு நிலைப்படுத்த, விளைச்சலை அதிகரிக்கலாமாம்!

யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லப்பட்டு, பூச்சிக்கட்டுப்பாட்டு முறை பயிற்றுவிக்கப்பட்டது. இந்த பயிற்சி 3 நாட்கள் நடந்தது. அங்கு ‘ஓம்… ஜூம்சா’ போன்ற மந்திரங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

இது ஏதோ டூபாக்கூர் விளையாட்டு என நினைக்காதீர்கள்- பூச்சிக்கட்டுப்பாட்டுக்காக இந்த மந்திரம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் ஒளிப்பொறி மூலம் பூச்சிக்கட்டுப்பாட்டு முறை பின்பற்றப்பட்டது. இதுவே பின்னர் கார்த்திகை விளக்கீடாக மாறியது. ஒளிப்பொறி மூலம் சில வகை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஆனால், தற்போது, நவீன விஞ்ஞானமுறையில் மேம்பட்ட முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தக்காலத்தில் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த மந்திரங்கள் சொல்லி யாகம் வளர்க்கலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் அப்படியொரு சம்பவம் நடந்தது. பூச்சிக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக யாகம் வளர்த்தார்களா அல்லது ஏதாவது பில்லி சூனியம் கலைக்க யாகம் வளர்த்தார்களா என்பதை விவசாய திணைக்களம்தான் வெளிப்படுத்த வேண்டும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

Leave a Comment