மியான்மரிலிருந்து கொண்டு வரப்பட்டு, இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ போதைப் பொருள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”டிசம்பர் 10ஆம் திகதி, இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர், சென்னையில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதாகவும், அவர் இலங்கைக்குச் சென்னையிலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தவிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், உதயகுமார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சப்ளையர் அக்பர் அலி என்பவரையும் கைது செய்திருக்கிறோம். மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மியான்மாரில் இருந்து மணிப்பூரில் உள்ள மோரே வழியாக இந்தக் கடத்தல் நடந்திருக்கிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், இந்தக் கடத்தல் போதைப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது. மேலும், விசாரணை நடந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், NCB சென்னை மண்டலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக 65.061 கிலோ போதைப் பொருளையும், 3338.018 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து இதுவரை 67 பேரைக் கைது செய்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.