நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்துக்காகவும் தொடரப்பட்டுள்ளதாக கூறி, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, ‘எனது சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை த்ரிஷா தரப்பில், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது. தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் தான் பேசியது மன்சூர் அலிகான் பேச்சுக்கான எதிர் கருத்துதான் என்று வாதிடப்பட்டது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும். தான் பேசிய முழு வீடியோவையும் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் எக்ஸ் வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவை செய்துள்ளனர். எனவே, இதை அவதூறாக கருத முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. இதே விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார்.
உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்துக்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனக்கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.