ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுகேஷ் அடிக்கடி சிறையிலிருந்து கொண்டு ஜாக்குலினுக்குக் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தை வழக்கறிஞர் மூலம் பத்திரிகையாளர்களுக்கும் வெளியிட்டுவிடுவார். அந்தக் கடிதத்தில் ஜாக்குலினை `பேபி’ உட்பட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கொண்டு அடுக்கியிருப்பார்.
தற்போது இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கோரி, ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சுகேஷ் தன்னை சிக்க வைத்துவிட்டதாக அதில் ஜாக்குலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், `சுகேஷ் எனக்கு கடிதமோ அல்லது அறிக்கையோ வெளியிட தடைவிகிக்கவேண்டும்’ என்று கோரி இருக்கிறார்.
சுகேஷிடமிருந்து ஜாக்குலின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பெற்றதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பல முறை ஜாக்குலினிடம் அமலாக்கப் பிரிவும், டெல்லி போலீஸாரும் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஜாக்குலின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவைப் பற்றி கேள்விப்பட்டதும், சுகேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து சுகேஷ் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இதை நான் என் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இதயம் உடைந்து போகும் அல்லது நொறுங்கிப்போகும் என்று நினைத்தேன். ஒன்றை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களை யாரும் குத்தவோ அல்லது சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ அனுமதிக்க முடியாது. நீங்கள் செய்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அவரின் நடவடிக்கை என்னை பிசாசாக மாற்றியிருக்கிறது. உண்மையை அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எனவே நொறுங்கிய இதயத்துடன் காயப்பட்டவனாகவோ அல்லது உணர்ச்சியற்றவனாகவோ அல்லது அமைதியாகவோ இருக்கவேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும். இப்போது உலகம் உண்மையையும் யதார்த்தத்தையும் அறியவேண்டிய நேரம் வந்துவிட்டது. சட்டத்திற்கு உட்பட்டு அனைத்தையும் அம்பலப்படுத்தப்போகிறேன்.
அவரை பாதுகாக்க ரகசியமாக வைத்திருக்கும் அனைத்து ஆதாரங்களையும், கோர்ட் மற்றும் விசாரணை ஏஜென்சிகளிடம் கொடுப்பேன். அவருடன் உரையாடியது, ஸ்கிரீன்ஷாட், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை விவரங்களைக் கொடுப்பேன்” என்று மிரட்டியிருக்கிறார்.
கடிதத்தில் ஜாக்குலின் பெயர் போடவில்லை. என்றாலும், அவர் ஜாக்குலினைத்தா் சுட்டிக்காட்டியுள்ளார் என சுகேஷின் வழக்கறிஞர், ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
ஜாக்குலின் மட்டுமல்லாது அவரின் சகோதரர் மற்றும் தாயாருக்கும்கூட சுகேஷ் பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுத்திருக்கிறார். அனைத்திற்கும் அவரிடம் ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரங்களை சுகேஷ் கோர்ட்டில் தாக்கல் செய்யும் பட்சத்தில், அது ஜாக்குலினுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அவற்றை கருத்தில் கொண்டுதான் இவ்வளவு நாள்களும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமைதியாக இருந்தார். ஆனால், தற்போது சுகேஷை `பிசாசு’ என்றும், `மோசமானவன்’ என்றும் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் ஜாக்குலின் குறிப்பிட்டிருக்கிறார். ஜாக்குலின் தவிர வேறு சில பாலிவுட் நடிகைகளுக்கும் சுகேஷ் பரிசுப் பொருள்கள் கொடுத்தார். ஆனால் அப்படிப் பரிசுப் பொருள்கள் வாங்கியவர்கள் அனைவரும் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பரிசுப் பொருள்கள் அனைத்தையும் அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துவிட்டது.