கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன், பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் 9 நாட்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவியை காணவில்லை என அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அவரது கணவர், சிசேரியன் மூலம் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்ததையடுத்து அவர் கடும் வலியால் அவதிப்படுவதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் சோதனை நடத்தியதில் மனைவி எழுதிய கடிதம் கிடைத்ததாக கணவர் போலீசாரிடம் கூறியதாகவும், அந்த கடிதத்தில் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வேன் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. .
இதன்போது, கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது மனைவியுடையது என கணவர் அடையாளம் காட்டியதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.