விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், விஜயகாந்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை. விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், விஜயகாந்திற்கு பருவமழை காரணமாக இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை என்றும் மேலும் சில நாட்கள் அவர் சிகிச்சை பெறுவது அவசியம் என்று கடந்த 2 தினங்களுக்கு முன்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி மியாட் மருத்துவமனை வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:- விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் உடல்நலம் தேற தொண்டர்கள் கோவில்களில் வழிபட்டனர். மேலும் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக வதந்திகளும் பரவியது. இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பிரேமலாதா விஜயகாந்த் கூறியதாவது:- விஜயகாந்த் நலமாக இருக்கிறார். இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும். வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். எனவே யாரும் வீண் வதந்திகளை, பரபரப்புக்களை நம்ப வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நானும் எனது மகன் சண்முகப்பாண்டியனும் விஜயகாந்தை சந்தித்த புகைப்படத்தைக் கூட போட்டு இருக்கிறேன்.. யாருமே வதந்திகளை பொய் செய்திகளை பரப்பாதீங்க.. நம்ப வேண்டாம் என்பதை மீண்டும் உங்கள் அனைவரையும் பார்த்து கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் புகைப்படத்தை பகிர்ந்து பிரேமலதா விஜயகாந்த் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். விஜயகாந்த் உடல்நலன் தேறி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்திருந்தனர்.