24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் செயற்பாடுகளை யாழ் ஊடக அமையம் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்-

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் ஊடகவியலாளர்களை அச்சமூட்டி முடக்கிவிட அரசு தனது காவல்துறை மூலம் செயற்பட்டுவருகின்றமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஏற்கனவே கிழக்கிலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்தும் விசாரணைகளிற்கு தொடர்ச்சியாக அழைத்தும் அரச காவல்துறை இயந்திரம் செயற்பட்டுவருவது அண்மை காலங்களில் முனைப்படைந்துள்ளது.

தமது ஊடகப்பணிகளில் சுயாதீனமாக இயங்கிவரும் கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் நாள் தோறும் நீதிமன்ற படியேறுவதும் காவல்நிலைய வாசலில் காத்திருப்பதும் தொடர்கின்றது.அதன் மூலம் அவர்களது உளவரணை சிதறித்து தமது இலக்குகளை அடைந்து விட அரச இயந்திரம் நப்பாசை கொண்டுள்ளது.

இந்நிலையில்; தலைவர் வே.பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான நேற்றுப் (27.11.2023)பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான “உதயன்” பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளியான செய்தி தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நேற்றுக் காலை 9 மணிக்கு அழைக்கப்பட்ட “உதயன்” பத்திரிகை ஆசிரியரிடம் பிற்பகல் ஒரு மணிவரையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான “உதயன்” பத்திரிகையில் தலைவர் வே.பிரபாரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தி, அவரது ஒளிப்படத்துடனும், மறுநாள் நடைபெறவிருந்த மாவீரர் நாள் அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கும் செய்தி ஒன்றும் வெளியாகியிருந்தன. இவை தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் காவல்துறையால்; யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை வவுனியாவில் பொதுவெளியில் அரங்கேற்றப்பட்ட சட்டவிரோத காட்சிப்படுத்தலை அம்பலப்படுத்தும் வகையில் செய்திசேகரித்துக்கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் மீது காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.அவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவரான பரமேஸ்வரன் கார்த்தீபன் மிக நீண்டகாலமாக யாழ்.ஊடக அமையத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் செயற்பாட்டாளராக உள்ளார்.

இத்தகைய செயற்பாடுகள் அனைத்துமே ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆட்சியாளர்களது கடந்த கால கொலை கலாச்சாரத்தினால் 39 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.

ஆனாலும் காலம் மாறினாலும் சூழல் மாறாத நிலையே தமிழர் தாயகத்தில் நீடிக்கின்றது.
கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ள சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கு நீதி கோரி சமரசமின்றி போராடும் நாம் அண்மை கால அச்சமூட்டும் அரச காவல்துறை போக்கு தொடர்பில் எமது அதிருப்தியை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

– இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment