யாழ் நகரிலுள்ள பிரபல பாடசாலை மூடப்படும் நேரத்தில் தவறுதலாக நூலகத்தில் மாணவன் ஒருவர் பூட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்த வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பாடசாலை முடியும் போது, நூலகத்தில் மாணவன் ஒருவர் இருப்பதை அறியாமல், நூலகம் மூடப்பட்டுள்ளது. நீண்ட நேரத்தின் பின் மாணவன் மீட்கப்பட்டார்.
நூலகத்தில் இருந்த மாணவன், பாடசாலை முடியும் நேரத்தில் புத்தகப்பை எடுப்பதற்காக தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார். வகுப்பறைக்கு சென்ற பின்னர்தான், தனது கண்ணாடியை நூலகத்திற்குள் தவறுதலாக வைத்து விட்டு வந்ததை உணர்ந்த மாணவன், அதை எடுக்க நூலகத்துக்கு சென்றார்.
இதேநேரம் நூலகத்திற்குள்ளிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், நூலகம் பூட்டப்பட்டது. இதற்குள், மாணவன் மீண்டும் நூலகத்துக்குள் நுழைந்ததை, சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருக்கவில்லை.
மாணவன் நூலகத்திற்குள் சிக்கிய நிலையில், மாணவனின் தந்தை அவரை ஏற்றிச் செல்ல பாடசாலைக்கு வந்துள்ளார். மாணவன் வராததால், அவர் வீடு சென்று விட்டார் என அவர் திரும்பி சென்றார். மாணவன் வீட்டுக்கும் வரவில்லை. பின்னர் 3 மணியளவில் மீண்டும் பாடசாலைக்கு வந்தார். மாணவன் இல்லை.
பின்னர், நூலகத்திற்குள்ளிருந்த உதவி கோரும் சத்தம் எழுவதையும், யன்னலில் தட்டப்படும் சத்தத்தையும் அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருப்பவர்கள் அவதானித்து தகவல் வழங்கியதையடுத்து, பாடசாலை அதிபர் சம்பவ இடத்தக்கு வந்து பார்வையிட்டு, நூலகத்துக்கு பொறுப்பான ஆசிரியரை மீள பாடசாலைக்கு அழைத்து, நூலகம் திறக்கப்பட்டு, மாணவன் மீட்கப்பட்டார்.