ஜா-அல பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தேக நபர் ஒருவர் அருகில் உள்ள கால்வாயில் குதித்து நீந்தி தப்பிக்க முற்பட்ட போது, அவரை பிடிக்க கால்வாயில் குதித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (23) நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
26 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் (99033) என்பவரே நீரோடையில் சிக்கி காணாமல் போயுள்ளார். இவர் சாவகச்சேரி, முதலாவது ஒழுங்கை, பழைய தபால் நிலைய வீதியில் வசிப்பவராவார்.
ஜா-அல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தயாராகும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் குழுவொன்று பொலிஸ் கெப் வண்டியில் அழைத்து வந்துள்ளனர். அப்போது, கைவிலங்குடன் காவல் நிலையம் அருகே உள்ள கால்வாயில் குதித்த சந்தேகநபர் தப்பி ஓட முற்பட்ட போது, சந்தேக நபரை கைது செய்ய பொலிசாரும் குழுவும் கால்வாயில் குதித்துள்ளனர்.
கால்வாயில் குதித்த ஜா-அல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் நீரோடையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் தப்பிச் செல்லவிருந்த சந்தேக நபர் மற்றைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




