ஹட்டனில் இருந்து காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்ஓயா கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போனவரின் சடலம் இன்று (12) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திக் ஓயா- ஒஸ்பன் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன் சுரேஷ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) பிற்பகல் ஹட்டனுக்கு வந்த அவர், அதிகளவில் குடிபோதையில் பஸ்ஸில் தனது வீட்டிற்கு பயணித்துள்ளார்.
பேருந்தில் இருந்து கீழே இறங்கிய இந்த நபர், அந்த வீதியில் அமைந்துள்ள தனியார் நீர்மின் நிலையத்தின் நீர் தாங்கிக்கு ஏறி, நீர் தாங்கியை அண்டிய கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் தோட்டத் தொழிலாளர்களும் இன்று (12) காலை முதல் அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி பிற்பகல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.