மன்னார், ஓலைத்தெடுவாயில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 2 கிலோ 150 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் 5 பேர், டிங்கி படகு, முச்சக்கர வண்டிஎன்பன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஜபா என்ற இலங்கை கடற்படை கப்பலினால் மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த கடற்பகுதியில் பயணித்த டிங்கி படகு ஒன்று அவதானிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
டிங்கி படகில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த தங்கம், சந்தேகநபர்கள் ஐவரும் அவர்களது வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய மேலதிக சோதனையில், இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட வாங்காலை மற்றும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.