சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று மாலை பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் பாராளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
அநீதிகளுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியதையடுத்து கோபமடைந்தவர்கள், தன்னை மிரட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என டயானா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.