சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் கூறியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் அவர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் டி.இமான் – அவரது மனைவி மோனிகா ரிச்சர்ட் இருவரின் பிரிவுக்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று பலரும் பதிவிட தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார்.
இமான் என்னை விவாகரத்து செய்ய முடிவெடுத்தபோது, அவரை சிவகார்த்திகேயன் ஆதரிக்கவில்லை. இது இமானுக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அது வெளியில் வேறுவிதமாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு வேறு பெண்ணை பார்த்து வைத்துவிட்டுத்தான் இமான் எனக்கு விவாகரத்து செய்தார். நான் மறுத்தபோது, அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி என்னை பணியவைத்தார்.
அவரே எங்களை விட்டுப் பிரிந்துவிட்டு இப்போது எதற்காக எங்களைப் பற்றி பேச வேண்டும். என் மகள்கள் மீது அவருக்கு சிறிதும் பாசம் கிடையாது. தான் இரண்டாவது திருமணம் செய்யபோவது குறித்து கூட அவர் குழந்தைகளிடம் சொல்லவில்லை. தற்போது இமானுக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேட விரும்புகிறார். அவருடைய இந்த பேச்சு, என்னை விட சிவகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவர் யோசிக்கவில்லை. இப்படிப்பட்டவரோடு 12 ஆண்டுகள் வாழ்ந்ததை எண்ணி வருத்தப்படுகிறேன்.
எங்களுக்கு உதவி செய்ய நினைத்த சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு சங்கடம் நேர்ந்துவிட்டது. எனக்கும் இமானுக்கும் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் சிவகார்த்திகேயனிடம் பேசியதுதான், அதன்பிறகு நான் அவரிடம் பேசவில்லை. என் மகள்களின் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். இமான் பேசுவது குறித்தெல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை.” இவ்வாறு மோனிகா கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மோனிகாவை விவாகரத்து செய்த டி.இமான், கடந்த ஆண்டு மே மாதம் அமலியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அமலியா, மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.