முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய எல்லைக்குள் சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், இஸ்ரேலியப் படைகள் திங்களன்று காசா மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தன.
ஹமாஸின் ஆளுகைக்கு உட்பட்ட காஸாவில் வசிப்பவர்கள், ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் இன்னும் கடுமையானவை என்று தெரிவித்துள்ளனர், மோதல்கள் 10 வது நாளாக நீடிக்கிறது.
மேலும் மக்கள் அடர்த்தியான கடலோரப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை உடனடியாக நடத்துமென நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்பு நாள் முழுவதும் தொடர்ந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, அதிகமான மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தனர்.
ஒக்ரேபர் 7ஆம் திகதி -இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மோசமான இரத்தக்களரி நாளன்று- ஹமாஸ் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தி 1,300 பேரைக் கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காசா பகுதிகள் மீது பொதுமக்களையும் இலக்க வைத்து இடைவிடாத குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த பகுதிக்குள் உதவி பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஆனால் இஸ்ரேலின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, காசா போர்நிறுத்த திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
“இந்த (தாக்குதல்களை) நடத்திய இந்த கொலைகார அமைப்பான ஹமாஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்கிறோம்.”
காசா இப்பொழுது இஸ்ரேலின் முழு முற்றுகைக்குள் சிக்கியுள்ளது. காசாவிற்குள் நுழைந்து ஹமாஸை அழிக்க தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருகிறது. ஹமாஸ் தற்போதும், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை தொடர்ந்து வீசுகிறது. திங்களன்று, தெற்கு இஸ்ரேலின் பல நகரங்களில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் டாங்கிகள் ஏற்கனவே எல்லையில் குவிந்துள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை குறைந்தது பாலஸ்தீனத்தில் 2,837 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள். கிட்டத்தட்ட 10,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 1,000 பேர் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.
உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சிக்கியுள்ள காசாவிற்கு, பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொன் உதவிகள் கிடைக்கவுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள் எகிப்தின் ஊடாக ரஃபா எல்லைக் கடவு வழியாக காசாவிற்கு பாதுகாப்பாக வழங்கப்படுவதற்கும், சில வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் ஒரு ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை, எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் எல்லைக்குள் உதவிகளை அனுமதிக்க கடவை திறக்க ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறியது.
ஆனால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கூறியது: “வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கு ஈடாக காசாவில் தற்போது போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் இல்லை.” என.
ஹமாஸ் அதிகாரி இசாத் எல் ரெஷிக் ரொய்ட்டர்ஸிடம், ரஃபா எல்லைக் கடவு திறப்பு அல்லது தற்காலிக போர்நிறுத்தம் பற்றிய செய்திகளில் “உண்மை இல்லை” என்றார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சுகளால் இந்த கடவை செயலிழக்கச் செய்ததாக எகிப்து கூறியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக சிலர் காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் திங்களன்று சில மணிநேரங்களுக்கு ரஃபா ரஃபா எல்லைக் கடவு திறக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி CNN க்கு தெரிவித்தார்.
காசாவில் உள்ள தனது குடிமக்களை கடக்கும் பாதைக்கு செல்லுமாறு அமெரிக்கா கூறியிருந்தது. காசாவில் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனிய-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 500 முதல் 600 வரை இருப்பதாக மதிப்பிடுகிறது.
பல பாலஸ்தீனியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் திங்களன்று சூட்கேஸ்கள் மற்றும் உடைமைகளுடன் எகிப்திய எல்லையைத் தாண்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் கடவை நோக்கி திரண்டனர்.
“பாதுகாப்பு இல்லை, நீங்கள் கடக்கும்போது கூட நீங்கள் பயப்படுகிறீர்கள்” என்று ஹதீல் அபு தாஹூத் ராய்ட்டர்ஸிடம் கூறினார். “காஸாவில் எங்கும் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் எங்கு சென்றாலும் ஷெல், ஷெல், அழுகை, அலறல், ரத்தம்“.
ஹமாஸால் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறும் 199 பணயக்கைதிகளை விடுவிக்கவும் வாஷிங்டன் முயன்று வருகிறது. அவர்களில் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டினர் உள்ளனர்.
மோதலை கட்டுப்படுத்த வாஷிங்டன் செயல்படுவதால், தேசிய பாதுகாப்பு சந்திப்புகளுக்காக வெள்ளை மாளிகையில் தங்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று கொலராடோ பயணத்தை ஒத்திவைத்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிடென் இஸ்ரேலுக்கு இராணுவ உதவியை அனுப்பியுள்ளார், ஆனால் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவியைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் மற்றும் ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலை போர் விதிகளை பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
கடும் குண்டுவெடிப்பு
காசாவின் வடக்கில், ஹமாஸ் போராளிகள் சுரங்கப்பாதை வலையமைப்பில் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறும்போது, திங்கள்கிழமை அதிகாலை அல்-குத்ஸ் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவித்தனர். வீடுகள் சேதமடைந்தன, நூற்றுக்கணக்கான மக்கள் செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தனர்.
இஸ்ரேலிய விமானங்கள் காசா நகரில் உள்ள சிவில் எமர்ஜென்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையின் மூன்று அலுவலகங்கள் மீது குண்டுவீசித் தாக்கியது, ஐந்து பேர் கொல்லப்பட்டது மற்றும் மீட்பு சேவைகளை முடக்கியது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவில் தங்கியிருப்பவர்கள், தெற்கிலிருந்த வெளியேறுமாறு ஏற்கனவே இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் செய்தியை புறக்கணிக்குமாறு ஹமாஸ் மக்களைக் கூறியுள்ளது.
காசா பகுதி முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மின் உற்பத்திக்கான எரிபொருள் இருப்பு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் (OCHA) திங்கள்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் – கிட்டத்தட்ட காசாவின் மக்கள்தொகையில் பாதியளவானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியது. அவர்களின் தேவைகளை சமாளிக்க ஐ.நா போராடுகிறது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக, காஸாவில் மின்சாரம் இல்லாததால், சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட முக்கிய சேவைகள் சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. கிணறுகளில் உள்ள உவர் நீரை மக்கள் குடித்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவின் போராளிகளுக்கும் இடையே எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடையக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் திங்களன்று பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேலுக்கு வந்தபோது, மோதலில் அதன் பங்கிற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் கூறியது.