நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊதாக் கலரு ரிப்பன்’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு டி,இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றனர். ‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.