குருநாகல் பகுதியில் ஓடும் பயணிகள் பேருந்துக்குள் வைத்து 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சீருடைகள் பலவந்தமாக அகற்றப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபரும், குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த சாரதியும், நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியை வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேகநபர் கும்பக்வெவ நிககொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர்.யக்கல பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் களஞ்சிய முகாமையாளராக பணிபுரிகிறார்.
பேருந்து சாரதி, வெல்கல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர். நடத்துனராக இருப்பவர் பெரியகடுனாலாவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர்.
கடந்த 11ஆம் திகதி வழமை போன்று பாடசாலை முடிந்து பாடசாலைக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, இந்த மாணவி பேருந்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் மாணவியின் இல்லம் அமைந்துள்ள வடுகம பகுதியை பேருந்து அண்மித்த போது,
மாணவி, சாரதி, நடத்துனர் மற்றும் அவரை வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேக நபர் மட்டுமே பேருந்தில் இருந்தனர்.
வடுகம பிரதேசத்திற்கு அருகில் மாணவி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது, சந்தேக நபர் அவரை பேருந்தின் பின் இருக்கைக்கு இழுத்துச் சென்றதாகவும், நடத்துனர் பேருந்தின் கதவுகளை மூடி ஜன்னல்களில் உள்ள திரைகளை மூடியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் சத்தத்தை சாரதி அதிகப்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
பேருந்து மாணவியை இறக்காமல் பயணித்தது. பேருந்த பயணத்தின் முடிவிடத்துக்கு சென்று, மீண்டும் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், இதற்கிடையில், முக்கிய சந்தேக நபரால் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவரது டை உள்ளிட்ட பாடசாலை சீருடையின் சில பகுதிகள் கூட அகற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, முன்கூட்டிய திட்டத்தின் பிரகாரம் சாரதி மற்றும் நடத்துனர், பேருந்தில் இச்செயற்பாட்டிற்காக இடம் வழங்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.வை.செனவிரத்ன தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்குப் பிறகுஎமாணவி பேருந்தில் இருந்து இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடப்பட்டார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்த அவர், கடந்த 12ம் திகதி பாடசாலைக்கு சென்றபோது ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதுபற்றி ஆசிரியை பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் டிஐஜி கூறினார்.
இதன் பிரகாரம் கும்பக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கடந்த 13ஆம் திகதி இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தனர்.
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வழித்தட அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி மேலும் தெரிவித்தார்.