போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்டத்தில் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராக கருதப்படும் துன்னாலை ரஞ்சித் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொ.கிரிசாந்தன் உத்தரவிட்டார்.
இதேவேளை, துன்னாலை ரஞ்சித்திடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட வழக்கை நிராகரித்த நீதிவான், அந்த வழக்கில் அவரை விடுதலை செய்தார்.
துன்னாலை ரஞ்சித் என அறியப்பட்ட நபர், யாழ் மாவட்டத்தின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளில் ஒருவராக கருதப்படுகிறார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்காக செல்லும் போதைப்பொருளுடன் தொடர்புடைய பெரும்பாலானவர்கள், துன்னாலை ரஞ்சித்திடமிருந்தே போதைப்பொருளை வாங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்தும், இந்த தகவல் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதுதவிர, துன்னாலை ரஞ்சித் தொடர்பில் நெல்லியடி பொலிசாருக்கு ஏராளமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், வாள்வெட்டு என சமூக அமைதிக்கு அந்த நபர் குந்தகம் விளைவித்து வந்ததாக தொடர்ந்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பருத்தித்துறை நீதவானின் கவனத்துக்கும் ரஞ்சித்தின் போதைப்பொருள் வர்த்கம் தொடர்பான தகவல் கொண்டு செல்லப்பட்டிருந்தது. ரஞ்சித் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கையெடுக்குமாறு பருத்தித்துறை நீதிவான், நெல்லியடி பொலிசாருக்கும் பணித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று துன்னாலைக்கு அண்மையாக உள்ள கட்டையடி சந்தி பகுதியில் வைத்து துன்னாலை ரஞ்சித்தை பொலிசார் மடக்கிப் பிடித்தனர். 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை இன்னொருவருக்கு விற்பனை செய்ய வந்த வேளையில், மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
போதைப்பொருள் வியாபாரி இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளிலேயே பயணித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை நெல்லியடி பொலிசார் விசாரணை செய்தபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தினமும் 3 கிராம் போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும், ஒரு கிராம் போதைப்பொருள் விற்பனை செய்வதால் தனக்கு ரூ.45,000 இலாபம் வருவதாகவும், தினமும் ரூ.135,000 வருமானமீட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தன்னை தேடி இளைஞர்களான வாடிக்கையாளர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியூடாக செயலிழக்க செய்ய உத்தரவு பிறக்குமாறு நெல்லியடி பொலிசார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், சந்தேகநபர் மீதான கைக்குண்டு வழக்கை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பொய்யான வழக்கை பொலிசார் தாக்கல் செய்துள்ளதாக கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதி, அந்த வழக்கை நிராகரித்தார்.
அத்துடன், போதைப்பொருளுடன் கைதான வழக்கில், சந்தேகநபரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேகநபரிடமிருந்த கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப. நாளையே கட்டளை பெற வேண்டுமென்றும் நெல்லியடி பொலிசாருக்கு கட்டளையிட்டார்.
கைதான போதைப்பொருள் வர்த்தகரான சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் முன்னிலையாகியிருந்தார்.