பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவை நீடிப்பு இன்றுடன் (09) நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு எவரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியலமைப்பு பேரவை அடுத்த சில தினங்களில் கூடி இந்த விடயம் தொடர்பில் உறுதியான முடிவுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதி பெற்ற பல பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டிருந்தன.
35வது பொலிஸ்மா அதிபரான சி.டி.விக்ரமரத்ன மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார். எனினும், புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் இழுபறியேற்பட்டது.
இதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு முதல் தடவையாக 3 மாத சேவை நீடிப்பு வழங்க ஏற்பாடு செய்து, அந்த சேவை நீடிப்பு முடிவடைந்ததையடுத்து, ஜூன் 9ஆம் திகதி இரண்டாவது சேவை நீடிப்பை வழங்கினார்.
அதன்படி, பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியதற்காக அவர் வழங்கியிருந்த இரண்டாவது சேவை நீடிப்பு இன்றுடன் (9) நிறைவடையவுள்ளது.
புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியல் தரப்புக்கள் விரும்பும் பொலிஸ் அதிகாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நடவடிக்கையெடுக்க தவறிய குற்றச்சாட்டை எதிர்கொள்வதால், அரசு சங்கடமான நிலைமையை எதிர்கொள்கிறது.