உலக சிறுவர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர் ஒருவரின் தலையில் மின் விசிறி தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக புசல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் இராஜரத்தினம் சதுர்ஷன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் டெல்டா வடக்கு, புபுரஸ்ஸ, தஷன்வத்தையில் வசிப்பவர்.
நேற்று முன்தினம் (4) அந்த பாடசாலை மைதானத்தில் உலக சிறுவர் தின கொண்டாட்டம் நடந்தது.
மதியம் 2 மணியளவில், பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவன், மேசை மீது ஏறி விளையாடிய போது, வகுப்பறையில் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறியில் சிறுவனின்து தலையில் மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாணவன் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கையில், மாணவன் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அதிக இரத்தப்போக்கு காரணமாக மாணவன் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி.இந்திக்க ஹேமகுமார பெற்றோர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து மின்விசிறி மற்றும் வகுப்பறையை சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் மூடிமறைக்க முயற்சிப்பதாக, மாணவனின் உறவினர்கள் குற்றம்சாட்டி, அமைதியின்மை ஏற்பட்டபோது, பொலிசார் தலையிட்டு, மாணவனின் உறவினர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், மாணவனின் தலை மின்விசிறியில் அடிபட்டு இரத்தம் கொட்டியதாகவும், பொலிசார் வருவதற்குள் வகுப்பறையைக் கழுவி சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இப்பாடசாலையில் பல இடங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறும் பெற்றோர், நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டியும், கவனத்தில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
பாடசாலையின் வகுப்பறைகளில் பாதுகாப்பற்ற மின் வயர்கள் காணப்படுவதாகவும், சில இடங்களில் வயர்கள் அறுந்துள்ளதாகவும், இரும்பு கம்பிகளும் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதுகுறித்து பாடசாலை அதிபர் சிவநேசன் சந்திரமோகன் கூறியதாவது:
விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் முடிவில், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை வகுப்பிற்கு அனுப்பி, அவர்கள் உணவை பகிர்ந்து சாப்பிட வைத்தார்.
சம்மந்தப்பட்ட மாணவன், சாப்பிட்டுவிட்டு தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்க ஆயத்தமானதாகவும், சில காரணங்களால் மேசை மீது ஏற முற்பட்ட போது, மின் விசிறியின் கீழ்ப்பகுதி தலையில் அடித்ததாகவும் கூறினார்.