முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு இடம்பெற்றது.
இலங்கை அரசே சட்டவாட்சியை பாதுகாக்க நீதித்துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கி நின்றனர்.
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.