வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய அல்லது வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்தை அடுத்த வாரத்தில் ஒருநாள் நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மனஅழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த கதவடைப்பு போராட்டம் திட்டமிடப்படுகிறது.
போராட்டம் குறித்த இறுதி அறிவிப்பு இன்று (5) மாலையில் வெளியாகலாம் என தமிழ்பக்கம் அறிகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழக்கம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த போராட்ட அறிவிப்பை வெளியிடவுள்ளன.
எதிர்வரும் 9ஆம் திகதி- திங்கள்கிழமை- கொழும்பில் உயர்நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக வடக்கு கிழக்கிலுள்ள சட்டத்தரணிகள் கூட்டாகவும், தனித்தனியாகவும் கொழும்பு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு பின்னரே கதவடைப்பு போராட்ட அறிவிப்பு வெளியாகும். அனேகமாக எதிர்வரும் 10, 11, 12ஆம் திகதிகளில் ஏதாவது ஒருநாளில் கதவடைப்பு போராட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு தமிழ் தேசிய கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, இந்த விவகாரத்தில் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளன.