சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின் போது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் காயமடைந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 125 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் கூட்டணியில் உள்ள ஒரு அதிகாரி, எண்ணிக்கை சுமார் 100 என்று கூறினார்.
சுகாதார அமைச்சர் ஹசன் அல்-கபாஷ் அரசு தொலைக்காட்சியில் ஆறு குழந்தைகள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டனர், ஆனால் சுமார் 240 பேர் காயமடைந்தனர் என தெரிவித்தார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இராணுவ பட்டதாரிகள். 14 பொதுமக்களும் இறந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
வியாழன் அன்று விழா முடிவடைந்த நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் விழாவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் கூறியது. ஒரு அறிக்கையில், “தெரிந்த சர்வதேச சக்திகளால் ஆதரிக்கப்பட்ட போராளிகள்” இந்த தாக்குதலை நடத்தியதாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஹோம்ஸில் நடந்த ட்ரோன் தாக்குதல் மற்றும் வடமேற்கு சிரியாவில் “பழிவாங்கும் ஷெல் தாக்குதல் பற்றிய அறிக்கைகள்” குறித்து “ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்” என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார், ஆனால் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெளியேறி விட்டார்.
“விழா முடிந்ததும், மக்கள் முற்றத்திற்குச் சென்றனர். அப்போது வெடிப்புக்கள் ஏற்பட்டன. அது எங்கிருந்து வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சடலங்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன, ”என்று விழாவில் அலங்காரங்களை அமைக்க உதவிய ஒரு சிரிய நபர் கூறினார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, சிரிய விமானப்படை விமானங்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்துதாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளன.
சிரிய தன்னார்வ அவசரகால மீட்புக் குழுவின் கூற்றுப்படி, வடமேற்கு மாகாணமான இட்லிப் மீதான தாக்குதல்களில் ஒரு பெண் மற்றும் குழந்தை உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். இட்லிப் மாகாணம் முழுவதும் பரவலாக செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜபல் அல்-ஜாவியாவின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசாங்க நிலைகளில் இருந்து தாக்குதல் தொடங்கப்பட்ட தாக்குதல்கள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு (12:30 GMT) தொடங்கியது. அனல்மின் நிலையம் மற்றும் பிரபலமான சந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.