இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில் மார்கெரா மாவட்டத்தில் உள்ள தங்களது முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் மேஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்றின் மீது வந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே இருந்த ரயில்வே தண்டாவாளத்தில் போய் விழுந்தது. அங்கிருந்து மின்சாரக் கம்பிகள் உரசியதால் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியதில் உள்ளே இருந்த 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து உக்ரைனியர்கள், ஒரு ஜெர்மானியர், இத்தாலியைச் சேர்ந்த ஓட்டுநர், இரண்டு குழந்தைகள் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கு பேருந்தில் நிரப்பப்பட்டிருந்த மீத்தேன் வாயு கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணைக்குப் பிறகு விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த விபத்து மிகப்பெரிய துயரம் என்று வெனிஸ் நகர மேயர் லூயிஜி ப்ருக்னாரோ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்தாலி பிரதமர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோரும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.