தலவத்துகொட வீடமைப்புத் தொகுதிக்கு அருகாமையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான சதுப்பு நிலத்தை, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவிக்கு ஒதுக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அனிஷ்கா ரஞ்சீவி டி சில்வா இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க, சட்டமா அதிபர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தலவத்துகொட பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள கெல்சி ஹோம்ஸ் என்ற வீட்டுத் தொகுதியிலிருந்து தான் வீடு ஒன்றை வாங்கியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பு வளாகத்தை ஒட்டி கால்வாய் உள்ளதாகவும், அதை ஒட்டி அரசுக்கு சொந்தமான சதுப்பு நிலம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண முதலமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் இந்த காணியை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ் மா அதிபர், கடுவெல மாநகர சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்த போதிலும் தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டவிரோத செயலால் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரவும் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மைகளை ஆராயும் போது இந்த காணியை பிரசன்ன ரணதுங்கவின் மனைவிக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த காணியை கைமாறும் நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறும், கைமாற்றும் நடவடிக்கையை செல்லுபடியற்றதாக்கவும் ஆணை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.
அத்துடன், குறித்த காணியில் உள்ள அங்கீகாரமற்ற நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆணை பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணி கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ள அரச காணியாகவே இருக்க அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.