மண்மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் ஆரம்பப் பிரிவை நேற்று (02) முதல் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கேகாலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலா தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பிரதான கல்லூரியிலிருந்து 500 மீற்றர் தொலைவில் கேகாலை புதிய மாற்று வீதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்தும் ஆரம்பப் பிரிவில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர், சுமார் 60 ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
இந்த ஆரம்பப் பிரிவு மலை முகட்டில் அமைந்துள்ளதுடன், கேகாலை நகரசபை தகன அறையும் பாடசாலைக்கு மேலே அமைந்துள்ளது. செப்டம்பர் 29ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் மேல் கட்டிடம் அமைந்துள்ள இடத்துக்குப் பக்கத்தில் மண் குவியல் இடிந்து விழுந்ததால் பாடசாலையை தற்காலிகமாக மூட ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலா, கேகாலை மாவட்ட பிரதம புவியியலாளர் நிமாலி வீரசிங்க, கேகாலை புனித ஜோசப் பெண்கள் வித்தியாலய பிரதி அதிபர் ஆர்.ஜெயசிறி, ஆரம்ப பிரிவு உதவி அதிபர் சாமரி அமரகீர்த்தி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
கேகாலை பெரகலை இராணுவப் பயிற்சி முகாமின் இராணுவத்தினரால் சரிந்து விழுந்த மண் குவியலை அகற்றி, அருகில் அமைந்துள்ள கழிப்பறை அமைப்பை திருத்தம் செய்து மற்றும் அதற்குப் பதிலாக தற்காலிக கழிவறையை அமைக்கும் வரை பாடசாலையை நேற்றிலிருந்து சில நாட்களுக்கு தற்காலிகமாக மூட வேண்டும் என அனுஷ்கா சமிலா தெரிவித்துள்ளார்.